Thursday, August 20, 2020

விடியலும் வந்ததே

“Meet me tomorrow at 4pm” என்று அரவிந்தின் பள்ளி ஆசிரியரிடமிருந்து Whatsapp செய்தி வந்ததிலிருந்து சுவாதிக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது.அரவிந்திடம் உடனே கேட்கலாம் என்றால் அவன் Chemistry tuition க்கு போயிருந்தான். அவன் வந்தவுடன், மெதுவாக அவனிடம் கேட்டாள் " என்னம்மா ஸ்கூலில் விஷயம் என்று கேட்டாள்" அவனும் "ஒண்ணும் இல்லம்மா, எல்லாம் நல்லாதான் போறது" என்று சொல்லிவிட்டான். 




ஆங்... உங்களிடம் சொல்லவில்லையே. அவன் இப்போது +1 படித்துக் கொண்டிருக்கிறான். நல்லபையன்தான். எதுக்கு இந்தசெய்தி என்று சுவாதியின் சிந்தனை அதிலேயே இருந்தது. வெங்கட் ஆபிசிலிருந்து வந்ததும் சுவாதி விஷயத்தை சொன்னாள். வெங்கட்டும் நாளைக்குப் போய்ப் பார்க்கலாம் என்றுகூலாக சொல்லிவிட்டான். 

மறுநாள் அரவிந்தின் பள்ளி…… சுவாதியும் கல்லூரியிலிருந்து நேராக பள்ளிக்கு மூணரை மணிக்கே வந்துவிட்டாள். 
அவள் ஒரு கல்லூரியில் பகுதி நேரஆசிரியை. வெங்கட்டும் நேராக சரியாக நான்கு மணிக்கு வந்துவிட்டான். 

வகுப்பறை அருகில் சென்றவுடன்தான், அங்குஇன்னும் பாத்து பனிரெண்டு பெற்றோர்களும் வந்திருக்கிறார்கள் என்று. எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை. 

ஆசிரியை உள்ளே அழைத்தார். சுவாதியும் வெங்கட்டும் உள்ளே சென்றமர்ந்தனர். ஆசிரியை புன்சிரிப்புடன் "ஒங்க பைய்யன் நல்லா படிக்கிறான். அதனால அவன State rank வாங்கற அளவுக்கு Train பண்ணப் போறோம்" அதைக் கேட்ட சுவாதிக்கு அப்பாடா என இருந்தது. "மேலும் தொடர்ந்தார் ஆசிரியை "அதற்கு உங்கள் ஒத்தொழைப்பும் வேண்டும் என ஆரம்பித்தார்" உடனே இருவரும் "நாங்கள் என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டனர். அதற்கு ஆசிரியை "நாங்கள் இந்த வருஷம் முழுசும் +2 பாடமே எடுத்து முடித்து விடுவோம். அடுத்த வருஷம் மீண்டும் மீண்டும்அதே பாடத்தை நன்றாகப் பயிற்சி கொடுப்போம். அதனால் நீங்க வீட்டுலகூட +2 பாடம் மட்டுமே concentrate பண்ணுங்க" என்றார். அவர்கள் இருவரும் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தனர். "

அரவிந், நீ நீட் எக்ஸாமில் ஸ்டேட் ரேங்க் வாங்கிருக்கே" என்று வெங்கட் சந்தோஷத்தில் குதித்தார். அம்மாவின் கண்களில்ஆனந்தக் கண்ணீர். அப்பொழுது அரவிந்தின் சிந்தனை பின்னோக்கிப் போனது. "அன்று பள்ளியிலிருந்து நானும் என் பெற்றோரும் சேர்ந்தே வந்தோம். அப்பா என்னிடம் விஷயத்தை சொன்னார். அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்டார். நானும், அப்பாவிடம் +1 பாடம் படிக்காமல் +2 சிலபஸ் புரியாதுஎன்றேன். அடிப்படை +1ல் தான் இருக்கு என்று சொன்னேன். அதற்க்கு அம்மாவும் +1 அடிப்படை சொல்லிதர்றேன் ஆனாலும்ரெண்டும் மேனேஜ் பண்ணறது கஷ்டம் என்றாள். 
"நானும் அதை என்னிடம் விட்டு விடு என்று சொன்னது மட்டும் இல்லாமல், வீட்டிற்கு வந்து முதல் வேலையாக என்முகநூலில், இரண்டு வருடம் கழித்துப் பார்ப்போம் என்று ஸ்டேட்டஸ் போட்டேன். "அன்று முதல் நான் வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுடன் +1 பயிற்சி. பிறகு டியூஷனில் +2 பாடம் என தீவிரமாக உழைத்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், அடிப்படை +1 இருந்ததால் +2 படிப்பு ஈசியாக இருந்தது. இப்படித்தான் இரண்டு வருடங்கள்உருண்டோடியது"  

“அரவிந்த்” என்று சுவாதி கூப்பிட்டாள். சுவீட்டுடன் வந்து நின்றாள். அரவிந்த் சிந்தனை களைந்தான். "அன்று மட்டும் அவர்கள் பள்ளியின் பேச்சைக் கேட்டு என்னை ப்ரெஷர் பண்ணி இருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா? இன்றோ நான் மட்டும் தான் நீட்டில் தேர்வாகியிருக்கிறேன்" என்று அவன் நினைக்கும் பொது அவன் கண்களில் வந்த கண்ணீர்பல உண்மைகளை உணர்த்தியது சுவாதிக்கு வெங்கட்டுக்கும்.

Monday, August 17, 2020

கிருஷ்ண ஜெயந்தி கலாட்டா

எல்லாரும் கிருஷ்ணா ஜெயந்தி இந்த ஆண்டு 2020 நன்றாக கொண்டாடினீர்களா? 

ஒவ்வொரு பண்டிகையும் நமக்கு பல நினைவுகளை ஞாபகப்படுத்தும். 
அதில் எனக்கு கிருஷ்ணா ஜெயந்தியும் ஒன்று. 


காலையிலேயே அம்மாமார்கள் எழுந்து, சமையலை முடித்து விடுவார்கள். ஏன்னென்றால் கிருஷ்ணருக்கு பட்சணம் செய்ய வேண்டுமே ! திரட்டி பால், லட்டு, முறுக்கு, தேன்குழல், தட்டை , வெல்ல சீடை, உப்பு சீடை. பிறகு மற்ற பலகாரங்கள் . இதில் எல்லா அம்மாக்களுக்கும் சவாலாக இருப்பது சீடை, அதிலும் உப்பு சீடை. இதற்காக ஒரு அவசர கூட்டம் நடக்கும். சீடை பண்ணும்போது மட்டும் கொஞ்சம் நான் கூப்படறேன் வந்துட்டு போங்கோ... மதியம் 2 மணி அளவில் காலணி அம்மக்கள் இடையே நெறைய நடமாட்டங்கள் இருக்கும்... அவங்க எங்க வீட்டுக்கு வரதும், எங்க அம்மா அவங்க வீட்டுக்கு போறதுமாக.... சீடை பண்ணும் நேரம் அது.  
குழந்தைகள் நாங்க எல்லாம் 3 மணியளவில் எங்கள் டிரஸ், சிகை அலங்காரம் எல்லாம் ரெடியாக எடுத்து வைத்து கொள்வோம். கிருஷ்ணர், ராதை, என்று வேடம் அணிந்து கொள்ள. 4 மணியிலேர்ந்து வாசலில் இழை கோலம் போட ஆரம்பித்து விடுவார்கள் அக்காக்கள்... கிருஷ்ணர் கால் போடும் போது அது காய்கிறவரை யாரும் நடக்க கூடாது என்று நிபந்தனை. அடுத்து நாங்கள் எல்லாரும் அலங்காரம் பண்ணி ரெடியாவோம் பூஜைக்கு. 

காலனியில் ஒரு வீட்டில் இருக்கும் கிருஷ்ணர் விக்கிரகம் துளசி யின் கீழ் வைத்து பொதுவாக, பூஜை ஆரம்பமாகும். அங்கேயே பிரசம் நெய்வேத்தியம் என்று சொன்னால் எல்லார் வீட்டில் இருந்தும் பட்சங்கள் எடுத்து வந்து பல ஆகரங்களாக அவருக்கு நெய்வேத்தியம் நடக்கும். 

பஜனை, கிருஷ்ணர் பாடல்கள் என்று வெகு ரம்யமாக போகும்.... ஆடல் பாடல் நாங்கள் செய்வோம். அதில் கட்டாயமாக இடம் பெரும் பாடல்கள் சில.... மாடு மேய்க்கும் கண்ணா,  அலை பாயுதே கண்ணா,  புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,  கண்ணா நீ பேகமாய் வாராய் இறுதியாக இடம் பெரும் பாடல் " குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ".... எங்களோட ஆடல் முடிந்தவுடன் எங்கள் கண்கள் எல்லாம் எல்லார் வீட்டு ப்ரசாதங்களிலேயே இருக்கும். அதற்காகவே, எங்களையும் பஜனை பாடல்களை கத்தி பாட சொல்லுவார் விச்சு அப்பா. அவர்தான் அங்கே ஆஸ்தான வாத்தியார். எல்லார் கையிலும் ஸ்வீட்ஸ் கொடுத்து " க்ருஷ்ணார்ப்பணம்" என்று சொல்லி வாயில் போட்டுக்க சொல்லுவார். அப்ப்பா ஒரு வழியாக பூஜை முடித்தது என்று நாங்கள் எல்லாரும் அப்படியே அமர்ந்து கொள்வோம். 

இலையில் அழகாக பாயசம், அப்பம், வடை, சுண்டல் , புளியோதரை, வெண்ணை போட்ட தயிர் சாதம், என்று பரிமாற நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே சாப்பிட்டு, சில குழந்தைகள் அலங்காரம் கலைக்காமலே  உறங்கி விடுவோம். இந்த உப்பு சீடை சம்பாஷணை ஒரு வாரம் எங்கள் அம்மக்கள் இடையே தொடரும். 

இப்படியாக போகும் நான் பார்த்த சிறு வயது கிருஷ்ணா ஜெயந்தி. 
இன்றும் நான் அதை அசைபோட்டவண்ணம் ஓவ்வொரு ஸ்னாக்ஸ் அண்ட் சுவீட்ஸ் செய்தேன். இதே மாதிரி பண்டிகைகள் செய்வது நம் பாரம்பரியம் என்றாலும் அது ஒரு சந்தோஷத்தை, உற்சாகத்தை நம்முள் உண்டாக்குகிறது என்று சொன்னால் மிகையாகாது. 

 A Break from our routine.

Thursday, June 18, 2020

SOME OF MY FATHER'S BOOK

குழந்தைகளுக்கான மின்மினிக் கதைகள்!

முதற்படைப்பு : 1973
எழுதியவர் : கு. வரதராஜன்  
சென்னை - 1
வெளியிட்டவர் : வீர லட்சுமி பதிப்பகம்.

உரிமை

மண்டியிட்டு வாழ்வதை விட
மடிவதுமேல் - மாஜினி.


  



Wednesday, June 3, 2020

மனிதர்கள் பலவிதம்

யானைக்கும் அடி சறுக்கும்....... குடூரில்

அப்பாவின் அனுபவத்தில் இருந்து ...  1974

குடூர்  ஸ்டேஷனில் என் அப்பா சென்னை ரயிலுக்காக காத்து கொண்டு இருக்கிறார். இன்னொருவனும் பக்கத்தில் வந்து உட்காருகிறான்.....

இனி வருபவை நாம் நேரில் பார்ப்பது போல்....

வந்தவன் : " சென்னை ரயிலுக்கா? அப்பாவை பார்த்து

அப்பா : ஆமாம்... செய்தித்தாளில் முழுங்கினேன்.

வந்தவன் : சார், எனக்கு ஒரு பேப்பர் கொடுங்க

அப்பா கொடுக்கிறார்.

சிறிது  நேரத்தில் " சார் நான் கொஞ்சம்  பாத்ரூம் போயிட்டு வந்துடறேன். என்னோட பெட்டியை பாத்துக்கோங்க என்றான். சரி என்றேன்.

சிறிது நேரத்தில் வந்து விட்டான். ரொம்ப நன்றி என்று சொன்னான்.

நேரத்தை பார்த்தேன் இன்னும் ரெயில் வர அரை மணி நேரம் இருந்தது, ... அவரை பார்த்தேன்.

நானும் போயிட்டு  வரேன் கொஞ்சம் என்னோட பெட்டியை பார்த்துக்கோங்க என்றேன்... சரி சார் என்றான்.

நான் வந்து பார்க்கிறேன், ஆளையும் காணலை பெட்டியையும் காணலை. பக்கத்துல இருக்கறவங்ககிட்ட கிட்ட கேட்டா தெரியாதுன்னு சொல்லிட்டாங்க...

பெட்டியில் ஆபீஸ்  பணம் 200ரூ , கோப்புகள் மற்றும் என் துணிமணிகள் இருந்தது. நல்ல வேலையாக என் பர்சில் 200 ரூபாய் இருந்தது. ரயில்வே போலீஸில் புகார் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

யாரையும் லேசில் நம்பாத என்னையே ஏமாற்றி விட்டானே என்று நினைத்து கொண்டேன். இதுதான் யானைக்கும் அடி சறுக்கும் என்பதோ?

அதே ரயில்வே ஸ்டேஷன். 1982

நான் ரயிலுக்காக waiting ....

ஒருவர் என்னை பார்த்து... சார் ஒரு request நான் பெங்களூரு போகணும். வழில பர்ஸ் பிக் பாக்கெட் ஆயிடுச்சு... நீங்க எனக்கு ஒரு 300 ரூபாய் கொடுத்தீங்கனா ஊர் போய் சேர்ந்துடுவேன். உங்களோட அட்ரஸ் சொல்லுங்க மணிஆர்டர் பண்ணிடறேன் என்றார். அவர் தமிழ் தெரியாதனால் இங்கிலீஷில் தடுமாறி பேசினார்.

சிறிது நேரம் யோசித்தேன்... என்னிடம் 1000 ரூபாய் இருந்தது. சரி சார் உங்களுக்கு தரேன். உங்ககிட்டேர்ந்து எனக்கு பணம் திரும்ப வருமான்னு தெரியாது, நானும் எதிர் பார்க்கலை , ஏதோ உங்களுக்கு help பண்ணனும்னு தோணறது பண்ணறேன் என்று சொல்லி 300 ரூபாயை கொடுத்தேன். அவருக்கு முகத்தில்  அவ்ளோ சந்தோசம். வலுக்கட்டாயமாக தன்  அட்ரஸ், பெயர் எழுதி தந்தார் என்னோட அட்ரஸ்  எழுதிக்கொண்டு உங்களுக்கு கண்டிப்பா நான் பணம் அனுப்பிடறேனு சொன்னார்.

இதை வீட்டில் வந்து சொன்ன உடன் என் அம்மா குடூர்ல விட்டது ஞாபகம் இல்லையா? இந்த 300 ரூபாயும் போச்சு என்றார்.

அதை பற்றி மறந்தே போனோம்.

எண்ணி 15 நாட்களில் மணி  ஆர்டர்... போஸ்ட்மேன் கத்தினான் யாரு என்று பார்த்தால் சிக்மகளூரில் இருந்து நரசிம்ம பட்.... 300 ரூபாய் மணி ஆர்டர். அதில் அவர் " மனித நேயம் இன்னும் அழியவில்லை " நீங்கள் மட்டும் அன்று எனக்கு உதவ வில்லை என்றால் " I would have suffered " Thanks a Million " we will continue our friendship " என்று சொன்னது மட்டும் இல்லாது  He used to send greetings for all festivals.

இதை ரயில் சிநேகம் என்றும் சொல்லலாமா?





Tuesday, May 19, 2020

Short Story on Diwali.... Impact of last post :)

தீபாவளியும் கோ லைவ்வும்...

பொற்கொடி நல்ல தமிழ் பெயர்..... இவர்தான் நம் கதாநாயகி. இவர் ப்ராஜெக்ட் மானேஜராக ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலையில் இருக்கிறார்.
பொற்! ப்ராஜெக்ட் ஷுட் கோ லைவ் 20th அக்டோபர். சோ ஜஸ்ட் டூ தி டெவலப்மென்ட் பாஸ்ட். வி நீட் டு டெலிவர் இட் ஆன் டைம் என்றார் ப்ராஜெக்ட் டைரக்டர்.
ஸுயூர் சார் என்று சொல்லி வெளியே வந்தாள் பொற்.

டீம் மீட்டிங் அர்ரேன்ஜ் பண்ணி அனைவரிடமும் விஷியத்தை சொல்லி., இன்னும் 15 நாட்களே இருக்கிறது... ஸ்டாண்டப் கால் வில் பி பிரம் மீ பார் 10-15 மினிட்ஸ் டெய்லி. வி நீட் டு கிவ் அவர் 100% டு மேக் திஸ் ப்ராஜெக்ட் success! என்றால் பொற்.


கைபேசி சீனுகியது .... அரவிந்த், பொற் கணவர்.... சொல்லுமா என்றாள். எனக்கு இன்னிக்கு லேட்டா ஆகும். குட்டிமாவை ( இவர்களின் செல்ல மகள் சஞ்சனா - மூன்று வயது )கிரஷ்லர்ந்து கூப்பட முடியாது என்றான்.
சரி பரவாயிலை நான் என் பிரெண்டு ப்ரியாவை அனுப்பி கொஞசம் கூட்டிண்டு வர சொல்லறேன், ஏன்னா எனக்கும் இங்க வேலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. Project கோ லைவ் 20th என்றாள்.
சரி முடியுமா இல்லேன்னா சொல்லு நான் போக முடியுமான்னு ட்ரை பண்ணி பார்க்கறேன் என்றான்.
நோ நோ... ஐ வில் டேக் கேர் என்று சொல்லி மொபைலை கட் செய்து ப்ரியாக்கு போன் பண்ணி பார்க்கலாம் என்று டயல் செய்வதற்குள் அண்ணா பண்ணினார்.
பொற் நான் பெங்களூரு வந்திருக்கேன்.... நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு.
அண்ணா நான் ஆபீஸ்ல இருக்கேன் நீங்க குட்டிமாவை கிரஷிலேர்ந்து கூட்டிட்டு வீட்டுக்கு போய்டுங்க., நான் வர லேட்டா ஆகும். பிரிட்ஜ்ல மாவு இருக்கு., தோசை ஊத்தி சாப்பிட்டுக்கோங்க என்றாள். சரிம்மா நான் பார்த்துக்கறேன் என்றார். சாவி எங்க இருக்கு என்றார். எப்போதும் போல பக்கத்துக்கு வீட்டில ஒரு கீ இருக்கு அண்ணா என்றாள்.
பொற் வீட்டுக்கு வரவே 11 மணி ஆகி விட்டது. குழந்தை தூங்கி போயிருந்தாள். அரவிந்த் இன்னும் வர வில்லை. என்னடா ரொம்ப வேலையா என்று பரிவுடன் கேட்ட அண்ணாவை பார்த்து ஆமாம் அண்ணா நீங்க சாப்டீங்களா சென்னைல எல்லாரும் எப்படி இருக்காங்க என்றாள்.
அரவிந்துக்கு கால் பண்ணினாள்.... பொற் மார்னிங் ஆயிடும் நான் வர என்றான். ஓகே குட் நைட் என்று சொல்லி போனை வைத்தான்.
காலை எழுந்து பார்த்தால் அண்ணா காபி போட்டு கொண்டிருந்தார்... ஏண்ணா நீங்க பண்ணிட்டு நான் பண்ண மாட்டேன்னா என்று சொல்லி கொண்டே காப்பியை பருகினாள்.


பொற் தீபாவளிக்கு என்ன பிளான் எப்போ வர்றேங்க என்றார். தெரியலை அண்ணா ஆனா ஒரு விஷயம் எனக்கு கோ லைவ் 20th அதனாலே ப்ராஜெக்ட் தீபாவளிக்குள் முடிஞ்சிடும் அரவிந்தும் ஓன் வீக்ல பிரீயாகிடுவார் ... ஒரு வாரம் லீவு போட்டுட்டு வந்துடறோம் என்றாள்.
அப்போ ஒன்னு பண்ணறேன் பொற்., பேசாம்மா குட்டிமாவை நான் ஊருக்கு கூட்டிண்டு போய்டறேன்... அவளும் அந்த பாட்டி இந்த பாட்டி என்று ஒரு 15 நாட்கள் இருக்கட்டுமே  (இரண்டு பேர் வீ டும் பக்கத்து பக்கத்து வீடு).... இங்கு உனக்கும் அரவிந்துக்கும் இப்போ வேலை ஜாஸ்தி... குழந்தை பாவம் என்றார் அப்பொழுது அரவிந்தும் ஆமாம் பொற் எங்க அம்மாகூட குட்டிமாவை சென்னை அனுப்பு, தீபாவாளிக்கு வரும் பொது கூட்டிண்டு போங்கனு சொன்னாங்க என்றான். சரி நம்பத்தான் 4 நாளுக்கு முன்னாடியே போகப்போறோம் என்று அண்ணாவுக்கு சரி என்றால்... குட்டிமாவும் குதித்து கொண்டு போய் விட்டாள்.
ஆபீஸ் பரபரப்பு.... மெயில் செக் பண்ணினால் கிளைன்ட் கால் அட் 11 என்று இருந்தது. சின்ன சின்ன மாற்றங்கள் சொன்னார்கள். நாங்களும் அதை மாற்றி செய்தோம். கிளைன்ட் கால், டீம் கால், என்று நேரம் தவிர ப்ராஜெக்ட் அப்டேஷன் என்னுடைய வேலை என்று ரொம்பவே ஓய்வு இல்லாமல் வேலை இருந்தது.
இப்படியே ஒரு வாரம் போனது.. கோ லைவ் இன்னும் 4 நாட்களே இருக்கும் பட்சத்தில் 40% ஒர்க் மாற்ற சொன்னது இன்னும் டீம் மெம்பெர்ஸ் இடையே ஏரிச்சலை தந்தது... பொற்! நம்ப எவளோ குறுகிய நாட்களா இந்த ப்ராஜெக்ட் கோ லைவ் பண்ண முடியாது சோ எக்ஸ்ட்டென்ஷன் வேண்டும் என்றார்கள்.
பொற்கு இந்த ப்ராஜெக்ட் எப்படியாவது சக்ஸஸ் பண்ணனும். சக்ஸஸ் பண்ணினா 4 வருஷம் ப்ராஜெக்ட் இந்த கம்பனிக்கு சைன் ஆயிடும் என்று தெரியும்.
பொற் ப்ராஜெக்ட் டைரக்டரிடம் இது பற்றி பேசினாள். தேதி மாற்றம் வேணும் சார் கோ லைவுக்கு என்றாள். நெறைய மெயில் சைனுக்கு பிறகு 26 அக்டோபர் கோ லைவ் என்று தீர்மானம் ஆனது.
பொற்க்கு ஒரு பக்கம் கோ லைவ் இன்னொரு பக்கம் தீபாவாளிக்கு ஊருக்கு போகணுமே என்ற டென்ஷன். 26th கோ லைவ் முடித்து எப்படி 27th தீபாவளிக்கு ஊருக்கு போக முடியும் என்று கவலை. ஆனால் வேலை டென்ஷனில் தீபாவாளி பற்றி நினைப்பை மறந்தே போனாள்.
அரவிந்த் தீபாவளிக்கு டிக்கெட் புக் பண்ணறேனு சொன்னபோது கூட பதில் சரியாக சொல்லவில்லை ஏன்னா ப்ராஜெக்ட் சக்சஸ்புல் ஆகணும்னு வெறியில் வேற எந்த நினைப்பும் இல்லை.
டீமுக்கு நிறைய ஊக்கம் கொடுத்தாள். நியூ ஐடியாஸ் நிறைய பகிர்த்தாள். 26th நெருங்க நெருங்க இரவு பகல் பார்க்காமல் வேலையில் மூழ்கினாள்.
26th கோ லைவ் ஸ்டார்ட் ஆனது.... ஒவ்வொன்றாக விவரித்து கொண்டே போனாள். கிளைன்ட் பக்கத்துலேருந்து பெரிய கைத்தட்டல் கிடைத்தது. ப்ராஜெக்ட் சக்சஸ் என்று என் ப்ராஜெக்ட் டைரக்டர் பிக் applause டு யு பொற் என்றார். Thank You சார் என்று சொல்லி விட்டு தன் டீம் மெம்பெர்ஸுக்கு நன்றியையும் பிக் பார்ட்டி ப்ராமிஸ் என்று ஊக்கம் கொடுத்து மெயில் செய்து டைம் பார்க்கையில் மணி இரவு 12. அம்மா அத்தை போன் செய்த போது கூட போன் எடுத்து பேசவில்லை.
நாளை காலை தீபாவளி. பொற்க்கு வீட்டு நினைப்பு வந்தது. பிளைட்ல டிக்கெட் செக் பண்ணினாள் மார்னிங் 9 மணி பிளைட் தான் இருந்தது.என்ன பண்ணறது என்று யோசித்தபடி காரை வீட்டுக்கு ஓட்டினாள்.


அரவிந்துக்கு போன் செய்தாள்.
சொல்லுடா பொற் ... என்ன ப்ரோஜெக்ட் லைவ் எப்படி போச்சு? successah என்றான்.
ப்ராஜெக்ட் டபுள் சக்ஸஸ்த்தான் அரவிந் ஆனா நம்ப ஊருக்கு போக முடியாதே அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு என்றாள்.
கவலை படாதே வீட்டுக்கு வா என்று சொல்லி போனை வைத்தான்.
பொற் வீட்டுக்குள் நுழையும் போதே வீடு லைட் அலங்காரம் பண்ணி பிரகாசமாக இருந்தது. ... அரவிந்தா இவ்வளோ பண்ணி இருப்பான் என்று எண்ணி கொண்டே போன அவளுக்கு ஒரே ஆச்சரியம்.! வீட்டுக்குள் அம்மா, அப்பா, அத்தை, மாமா, அண்ணா, அண்ணி, குழந்தைகள் என்று அனைவரும் இருந்தார்கள். குட்டிமா ஓடி வந்து கட்டி கொண்டாள்.
எல்லாம் அரவிந்த் பிளான் தான் பொற் என்று அப்பா சொன்னார். நாங்க எல்லாரும் மத்தியானம் வந்துட்டோம். உனக்கு surprise.
பொற் அரவிந்தை ஆனந்த கண்ணீர் மல்க wonderful ஐடியா. Thank you என்று சொன்னவளுக்கு, கூல் என்று சொன்னான்.


அனைவரும் ஹாப்பி தீபாவளி என்று கோஷம் போட்டார்கள்.
கல்யாணி கிருஷ்ணன்
9989237712
சுபம்.

நான் பார்த்த தீபாவளி...


பாட்டி அந்த வயதிலும் உற்சாகம் குறையாமல் தீபாவளி தேதியை பார்த்து இன்னும் தீபாவளிக்கு எத்தனை நாள் இருக்கிறது என்று கணக்கு செய்வாள் . பாதி நாட்களை விட்டுவிட்டு இன்னும் ஒரு வாரம்தான் என்று சொல்லுவார். அப்படி ஒரு உற்சாகம். அனைவரும் சேர்ந்து அப்பாவுடன் தீபாவளி டிரஸ் எடுக்க செல்வோம் . முதலில் தாத்தா பாட்டிக்கு பின் எங்களுக்கு. அப்பாக்கு டிரஸ் எடுத்துக்கொண்டதாக ஞாபகம் இல்லை. பேபி அத்தைக்கும் புடவை எப்பொழுதும் எடுப்போம் . தி. நகரில் டிரஸ் அதை அடுத்து கண்டிப்பாக சரவணா பவன் ஹோட்டல் பேப்பர் தோசை, ஆப்பம் சட்னி, தாத்தா பாட்டிக்கு ஐஸ்கிரீம். ஆட்டோவில் வீடு வந்து சேர்வோம் . எனக்கு வெளியில் போனால் தாகம் எடுத்து விடும் ஜூஸ் குடிக்கத்தான்.....எல்லாரும் வீட்டிற்கு வந்து ட்ரெஸ்ஸை மறுபடியும் பார்த்து எப்பொழுது தீபாவளி வரும் என்று காத்து கொண்டு இருப்போம். பேபி அத்தைக்கு எப்பொழுதும் வாங்கிய புடவையை மறுபடியும் போய் மாற்றினால்தான் திருப்தி ஆனால் அந்த புடவை முதலில் வாங்கிய புடவையை விட மங்கலாக இருக்கிறது என்று என் பாட்டியிடம் இருந்து திட்டு வாங்கி கொள்வாள் . பாட்டி எப்பொழுதும் காலை வெளிச்சத்தில் புடவை பார்க்கவேண்டும் என்று வெய்யிலில் வைத்து பார்ப்பார். அவ்வளவு  ஆசை. நாங்கள் எல்லா காலனி பெண் குழந்தைகளும் அக்காக்களுடன் ட்ரெஸ்ஸுக்கு மேட்சாக தோடு, கிளிப், வளையல், பொட்டு என்று வாங்க மார்க்கெட்டில் இருக்கும் காஸ்மெடிக்ஸ் கடைக்கு போவோம். மழை இருந்தால் கூட குடை பிடித்து கொண்டு..... அப்பொழுது நதியா ஸ்டைல் ரொம்ப பேஷன்.



என் அம்மா எல்லா பட்சணமும் சாஸ்திரத்துக்கு செய்வாள். அம்மாவுக்கு எண்ணையில் நின்றால் தலைவலி வயற்று குமட்டல் வந்துவிடும் என்று அப்பா ரொம்ப பலகாரம் செய்யவேண்டாம் என்பார் . எங்கள் காலனி மாமி ஒருவர் பின் ஒருவராக பட்சணம் செய்முறை ஆலோசித்து பேசி கொள்வார்கள் இடையே சரியாக வரவில்லை என்றால் அம்மா மற்றவர் வீட்டுக்கும் அவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்து பக்ஷணம் உதவி செய்வார்கள். இதற்கு இடையில் என் தாத்தாவுக்கு அரை வேக்காட்டில் முறுக்கு எடுத்து கொடுக்க சொல்வார் . பல்லில் கடிக்க லோகுவாக இருக்கும்.


பட்டாசுக்கு எங்கள் அண்ணா தான் லிஸ்ட் போடுவார். எனக்கு வெடி என்றால் பயம்.அண்ணாவும் அக்காவும் குருவி வெடி, லட்சுமி வெடி, அட்டோம் பாம் சரம் என்று லிஸ்ட் போடும் போது நானும் என் பங்குக்கு ஊசி வெடி, பாம்பு மாத்திரை , பென்சில் சாட்டை என்று சொல்வேன் . அப்பொழுது  எல்லாம் பட்டாசு கடை நவராத்ரி முடிந்தவுடன் திறந்து விடுவார்கள்.இதுல என்ன வேடிக்கை என்றால் யார் வீட்டில் அதிகம் வாங்கியிருக்கிறார் என்ற போட்டி நடக்கும் . எங்க வீட்ல 150 ரூபாவுக்கு வாங்கிட்டோம் உங்க வீட்ல என்று காம்பரிசன் வேற!.தீபாவளி முதல் நாள் பால் பாயசம் பஜ்ஜி , வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு கறி தான் மாற்ற படாத மெனு . கொஞ்சம் மத்தாப்பு பட்டாசு முதல் நாள் இரவுக்கு, தீபாவளி அன்று நிறைய என்று பிரித்து கொள்வோம் . தீபாவளி அன்று யார் முதல் மத்தாப்பு கொளுத்துகிறார்கள் என்ற போட்டி வேற...


விடியற் காலை பார்க்காத நாங்கள் 3 மணிக்கே எழுந்து விடுவோம். அம்மா ஒரு பலகையில் கோலம் போட்டு அதில் எஙகளை உட்கார சொல்லி முதலில் தாத்தா பின் பாட்டி அப்பா அம்மா என்று அனைவரும் தலையில் எண்ணெய் வைப்பார்கள் ( காய்ச்சின எண்ணெய் ). அதில் என் தாத்தா அழகாக மூன்று விரலில் எண்ணெய் எடுத்து நாசுக்காக வைப்பார், ஏன் என்றால் அனைவரும் எண்ணெய் வைத்து அதிகமாகிவிடுமோ என்று. அனைவரின் புத்தாடையும் ஸ்வாமி முன்னாடி சந்தனம் குங்குமம் வைத்து பாட்டி நாங்கள் குளித்து வந்தவுடன் தருவார் . நாங்கள் அதை போட்டுகொண்டு பாட்டி தாத்தா அப்பா அம்மா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தவுடன் முதலில் கொடுப்பது தீபாவளி மருந்து . சாப்பிட்டே ஆகா வேண்டும்.



மருந்து சாப்பிட்ட பிறகுதான் ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸ். ஆனால் ஸ்வீட்ஸ் சாப்பிடும் பொறுமை கூட இல்லாமல் மத்தாப்பு கொளுத்த புஸ்வாணம் சங்கு சக்கரம் என்று வைக்க ஓடி விடுவோம் . அப்பா ஒரு இரும்புபக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து அதில் கொளுத்தி அணைந்த மத்தாப்பை போட சொல்லுவார். வேற யார் காலிலும் மத்தாப்பு சுட்டுவிட கூடாது என்பதற்காக. அம்மாவும் எல்லா மாமிகளும் கங்கா ஸ்தானம் ஆச்சா என்று பரஸ்பரம் கேட்டு கொள்வார்கள் . என் அப்பாவும் மற்ற நண்பர்கள் அப்பாக்களும் ஹாப்பி தீவாளி கங்கா ஸ்தானம் ஆச்சா என்று கேட்டுக்கொண்டு நாங்கள் பட்டாசு வெடிப்பதை சூப்பர்விஸ் செய்வார்கள். இப்படியாக போகும் எங்கள் தீபாவளி. அன்று முழுவதும் புது ட்ரெஸ்ஸை அவிழ்க்க மாட்டோம். எல்லார் பட்டாசும் வெடித்த முடிந்த உடன் அதில் இருக்கும் மருந்தை எடுத்து கொளுத்தி போடுவோம்..... பட பட என்று வெடிக்கும்... அதை விட பெரிதாக இருக்கும் எங்கள் சிரிப்பு.

அந்த தீபாவளியை பார்த்தால் அனுப்பி வையுங்கள்.

Friday, May 15, 2020

வரம் கிடைக்குமா...!

வரம் கிடைக்குமா!

வர்ஷா ஞாயிற்று கிழமை என்பதால் லேட்டாக தான் எழுந்தாள். முரளி அவளுக்கு முன்னதாவே எழுந்து காபிக்கு பால் காய்ச்சி டிகாஷன் போட்டு வைத்து விட்டு  வாக்கிங் போயிருந்தான். காபியை குடித்து கொண்டே வாட்ஸாப்ப் ஓபன் பண்ணினாள்... அதில் வைஷுவுடன் (என் அக்கா) சாவித்ரி மீட் பண்ணின போட்டோவை பார்த்தாள்... 
பதில் போடுவதற்குள் அக்கா வைஷுவே கால் பண்ணினாள்.

ஹாய் குட்  மார்னிங்!  என்றாள்

எஸ் டியர்  குட்  மார்னிங்! என்னடி நீ சாவியை (சாவித்ரியை) மீட் பண்ணினதை சொல்லவே இல்லை. சூப்பர் பிக்ஸ்....

ஆமாம்டி திடீர் மீட் இங்க மயிலாப்பூர் வந்தா  பேங்க் விஷயமா அதனாலே  வரமுடியுமானு  கால் பண்ணினா சோ திடீர் மீட்டிங் என்றாள். 

நேரிய சம்பாஷணைக்கு பிறகு, வைஷு சொன்னாள் , அவங்க வீடுகூட விக்கலாம்னு  ஐடியா போலன்னு .... உடனே நான் அப்படியா முடிவு  பண்ணிடாளா  என்று கேட்டேன்... தெரியலை கேக்கறேன்னு சொல்லிட்டு போனினை வைத்தாள்.

முரளி உள்ளே நுழைத்தான்....மொபைலை கையில் வைத்தபடியே நான் : ஹாய் முரளி, வாக்கிங் ஆச்சா என்று கேட்டு விட்டு , முரளி இப்போ  வடபழனி காலனில  வீடு  எவ்வளவு  இருக்கும்? என்றேன்
வடபழனி காலனி வீடு 80 லட்சம் இருக்கும். கார் பார்க்கிங் கிடைக்காது ஆனா அங்க வீடு கெடைக்கறது ரொம்ப கஷ்டம் செம்ம ஏரியா என்றான்.
என் நினைவுகள் வடபழனி காலனிக்கு போனது.



நான் வசித்த அந்த காலனி வடபழனி கோவிலுக்கு மிக அருகில் இருந்தது.  கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும். பத்து தனி தனி வீடுகள் அடங்கிய காலனி  அது.

அன்று ஞாயிற்று கிழமை.

குழந்தைகள் நாங்கள் ஒருவரை ஒருவர் லைனில் தள்ளிக்கொண்டு பின்னால் சென்றுகொண்டு தப்பிக்கப் பார்த்துக் கொண்டிருந்தோம்!!
ஒரே கூச்சல், அலறல் லைனில் எல்லோரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டுதான் செல்வார்கள், ஆனால் அன்று மட்டும் ஏன் அப்படி?
வேறொன்றுமில்லை.  ஞாயிற்றுக் கிழமையானால் வேப்பங்கோழுந்தை அரைத்து தொண்டையில் போட்டு முழுங்க சொல்லுவாள் பேபி மாமி.  செல்லம் மாமி குழந்தைகள் தப்பிக்காமல் இருக்க கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுவாள் !!

அதுக்குதான் ஒரே கூச்சல் அலறல்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் இதுவே அம்மாக்களின்  சட்டம.
 அப்பொழுது திங்கட்கிழமையானால் ஸ்கூல் யூனிபார்ம் வைட் அண்ட் வைட் ஆச்சே!!  எல்லாக் குழந்தைகளும் கிணற்றடியில் கூடி தங்கள் ஷூக்களை அலம்ப வேண்டும்.  யாருடைய ஷூ நன்றாக வெளுகிக்கிறது என்று போட்டி வேறு.
இப்படியே பகல் இரண்டு மணியான இட்லி தோசைக்கு மாவு அரைக்க அம்மாக்கள் கல்லுரல் அருகே கூடுவார்கள் ஏன்னென்றால் ஒரே கல்லுரல் 10 வீட்டுக்கும்..    ஒருவர் பின் ஒருவராக பேசிக்கொண்டே மாவு அரைப்பார்கள். 5 மணிக்குள் மாவு அரைத்து விட வேண்டும். ஏன்னென்றால் 5.30 மணிக்கு தூர்தர்ஷனில் சினிமா பார்க்க பக்கத்துக்கு தெருவில் இருக்கும் துர்கா வீட்டுக்கு போக வேண்டும். பெரும்பாலும் வரும்பொழுது தூங்கி கொண்டேதான் வருவோம் நாங்கள்.

திங்கள்கிழமை ஒரே பரபரப்பு... பக்கத்துக்கு வீட்டு  மாமா ஓட்டமும் நடையுமாக வந்து இன்னும் கடை திறக்கலை என்றார். எல்லா அம்மாக்களும் பெரிய குழந்தைகளை பார்த்து நேத்திக்கு சாயங்காலம் யூனிபோர்ம் அயன்  கடையிலேர்ந்து  வாங்கிண்டு  வர சொன்ன எங்கே கேக்கறேள்  என்றார்கள் கோரஸாக..... நாங்கள் எல்லாம் திரு திருனு முழிச்சுண்டே வாசலை பார்த்தால் அயன்கராரே வந்து நேத்திக்கு லேட் ஆயிடுச்சி அம்மா அதானு சொல்லறதுக்குள்ளே அனைவரும் அவரவர் யூனிபோர்மை எடுத்து போட்டுகொண்டு ரன்னிங் ரேஸ்ல ஸ்கூல் செல்வோம். இப்படியே சாயங்காலம் வீட்டு பாடம் (டியூஷன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் பெரியவர்கள் பிள்ளைகளுக்கு கத்துக்கொடுப்பார்கள் ) பிறகு விளையாட்டு என்று வாரம் முழுவதும் ஜோராக போகும்.

சனிக்கிழமை என்றால் கிருஷ்ணர் பஜன்ஸ்... பஜனை கேட்போமா இல்லையோ பிரசாதத்துக்காகவே உற்சாகமாக இருப்போம். புளியோரை, தயிர் சாதம், சுண்டல், பாயசம். அருமையாக இருக்கும் மொட்டை மாடியில் அனைவருக்கும் பரிமாறுவார்கள்.

சாதாரண தினங்களே  இப்படி என்றால், பண்டிகை நாட்கள் சொல்லவேண்டுமா? அதில் கொலு, தீபாவளி வெகு ஜோர். கொலுவுக்கு என்று சில பாடல்கள் கற்றுக்கொள்வோம். ஒரு வீட்டில் பாடியது ரிப்பீட் ஆக கூடாது. அதே சமயம் ஒரே நாளில் பாடவும் மாட்டோம். எல்லார் வீட்டு சுண்டலும் மொட்டை மாடியில் வைத்து சாப்பிடுவோம். ஆஹா என்ன அருமையான நாட்கள்...

இப்போது அந்த காலனியில் 8 வீடுகளில் புதிதாக வாங்கியவர்கள் வந்துவிட்டார்கள். விற்றவர்களில் என் அப்பாவும் ஒருவர்.  இப்போது உங்களுக்கு புரிகிறதா ஏன் என் மனம் இத்தனை பதைபதைக்கிறது  என்று? எப்படியாவது சாவித்ரி அம்மா வீட்டை  வித்தால் நானே  வாங்கி விட மாட்டோமா என்பதுதான் அது….

தினமும் அலுவலகம் செல்லும் பொது ஒரு முறையாவது காலனி  வழியாக காரை திருப்பாமல் வரமாட்டேன். இன்னும் அந்த காலனி மட்டும் நவீனத்துக்கு மாறாமல் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் கட்டிடம். இவ்வளவு குழந்தை பருவ நினைவுகளை  வரம் போல வாரி தந்த காலனியே எனக்கு கோவில். நான் கோவிலாக நினைக்கும் காலனியில் எனக்கு மறுபடியும் வாழ வரம் கிடைக்குமா?


- கல்யாணி கிருஷ்ணன்

Tuesday, May 12, 2020

தந்தையின் நினைவுகளுடன் என்னுடைய எழுத்தும் இடை இடையே...



புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த எம் மாவீரர்களின் குடும்பத்திற்காக........




Thursday, April 30, 2020

A Second life....

சம்பவம் 2 :-

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட கண்டம். இனி அந்த காட்சி நீங்கள் சொன்னபடி ...

கர்நாடகா குல்பர்க்கா சுலியா வழியாக பஸ் சென்று கொண்டு இருக்கிறது. நான் பின் சீட்டில் உட்கார்ந்து இருக்கிறேன். பின்சீட்டில் உட்காரவே மாட்டேன், ஒரு முஸ்லிம் தம்பதியர் என்னிடம் வந்து, நாங்கள் இருவரும் சேர்த்து உட்கார வேண்டும், பின்சீட்டில் ஒரு இடம் இருக்கிறது, நீங்கள் அங்கு போய்  அமர முடியுமா என்று கேட்டார்கள். அதனால்தான் பின்சீட்டு.....

பஸ்சின் பின்சீட்டில் உட்கார்ந்த சில நேரத்தில் கண் உறங்கி போனேன். கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய சத்தம்.... அதுதான் தெரியும். கண்விழித்து பார்த்தால், ஒரு நதிக்கரையில் நான், ஒரே அழுகுரல், ஆம்புலன்ஸ் சத்தம்.... பஸ் கீழே விழுந்து கிடந்தது..... என் கை  கால்களை தொட்டு பார்த்தேன், எல்லாம் இருந்தது சிறு காயங்களுடன்.... சரி வாயை கொப்பளிக்கலாம் என்று தண்ணியை  எடுத்து கொப்பளித்து நதியை பார்த்தால் ஒரே ரத்தம், என் வாயிலேர்ந்துதான்... அதை பார்த்த மாத்திரத்தில், மயங்கி போனேன்.

கண் விழித்தபோது, சுலேயா அரசு மருத்துவமனையில் படுத்திருதேன். நான் கண்விழித்ததை பார்த்த நர்ஸ், உங்களுக்கு முன்பற்கள் மொத்தமா போய்விட்டது, தையல் போட்டு இருக்கிறோம் என்றார். வாய் வீங்கி இருந்தது. சாப்பிட கூட வாய் திறக்க முடிய வில்லை. சுலேயாவில் இருக்கும் என் நண்பரும், வியாபாரி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து கொண்டு போனார். நான் அவர் வீட்டில் 2 1/2 மாதம் இருந்து சித்தா வைத்தியம் பெற்றேன். இப்போது நலமாக இருக்கிறேன். இன்னும் 10 நாட்களில் சென்னை வருகிறேன் என்று இத்தனை விபரங்களை தாங்கி வந்த இன்லேண்ட் லெட்டர் எங்களுக்கு கிடைத்தது.

இப்போதும்  அந்த நிகழ்ச்சியை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. அதில் ஒன்று கடவுளின் கருணை , சுமார் 20 பேர் இருந்த பஸ்சில்  நீங்கள் பிழைத்தது.( உன்னிடம் இடம் கேட்டு உட்கார்ந்த முஸ்லிம் தம்பதியர், விபத்து நடத்த இடத்திலேயே உயிர் இழந்ததாக நீங்கள் சொன்னீர்கள்) மற்றொன்று உங்களின் மனவலிமை. நீங்கள் பூரண குணமாகும் வரை எங்களுக்கு விஷியத்தை சொல்லாமல் குடும்பத்தை கலக்க படுத்தாமல் இருந்தது.

இப்பொழும் எனக்கு ஞாபகம் இருக்கிறது அன்று வந்த அந்த கடிதம் இந்த சம்பவத்தை சுமந்த  படி...

வாழ்க்கை சம்பவம் இன்னும் பல ........


Friday, April 24, 2020

குண்டாபுர (மங்களூர்) ரயில் நிலையத்தில்..

என் அப்பா என்னுடன் பகிர்ந்த வாழ்க்கை சம்பவங்கள் :-

சம்பவம் 1:-

1980 இல் நடந்தது.

நல்ல காற்று, மழை, இடி, குண்டாபுர (மங்களூர்) ஸ்டேஷனில் நான் (அப்பா) நிற்கிறேன். மின்சாரம் இல்லை. ஸ்டேஷன் மாஸ்டர் இன்றைக்கு இரவு ட்ரெயின் வராது என்று சொல்லி தன் அறையை பூட்டி கொண்டு போய் விட்டார்.

நான் ஒருவன் மட்டும் என் கால்களுக்கு இடையில் இரண்டு பெட்டிகளையும் வைத்து கொண்டு ஸ்டேஷனில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து இருக்கிறேன். ஒரு பெட்டியில் ஆபீஸ் கேஷ், இன்னொரு பெட்டியில் என் உடமைகள்.... அப்பொழுது மின்னலுக்கு இடையில் ஒரு உருவம் அடர்ந்த தாடியுடன் என் முன்னால் நின்று என்னையே பார்த்து கொண்டு இருந்தான். சரியாக பார்ப்பதற்குள் மின்னல் நின்று விட்டது... குமிருட்டு ...


உடனே நான் என் பெட்டிகளை இன்னும் நன்றாக பற்றிக்கொண்டு,  தீர்க்கமாக எந்த ஒரு பயமும் இல்லாமல் மின்னல் வந்த இடத்தையே பார்த்தேன். இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தது, அவனும் என்னையே பார்த்தான். உடனே நான் உரத்த குரலில், யார்டா, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அவன் எதுவுமே பதில் சொல்லாமல் ஓடி விட்டான். அன்று இரவு நான் தன்னந்தனியே ஸ்டேஷனிலேயே உறங்கினேன்.

விடிய காலை ஸ்டேஷன் மாஸ்டர் வந்து அவர் அறை திறக்கும் சத்தம் கேட்டு தூக்கம் களைந்தேன்.

என்ன சார், இங்கேயே தூங்கிட்டிங்களா? என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார். ஆமாம் என்று சொல்லி நேற்று நடந்த சம்மதத்தை ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொன்னேன்.

ஓ அப்படியா... அவன் வேற யாரும் இல்லை சார், ஒரு பைத்தியம். இங்கதான் சுத்திகிட்டு இருப்பான் என்றார்.

உடனே இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நான் "அப்பா  உனக்கு பயம்வே இல்லையா" என்றேன்.

அப்பொழுது அவர் சொன்னார், வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் தைரியத்தை மட்டும் விட்டுவிட கூடாது என்று.

இப்படி தன் வாழ்க்கை பாதையில் தான் எதிர் கொண்ட பல சம்பவங்களை எப்பொழுதும் சொல்வார்... அது ஏராளம்.

இன்னும் வரும்............ 

First train in Kumbakonam

அப்பாவின் சிறுவயது குறும்பு:-

அப்பாவுக்கு அப்போது வயது 8 இருக்கும்.

திம்மக்குடியில் அவர்கள் விளையாடி கொண்டிருக்கும் போது...  இனி அப்பா தொடர்வார் ...

ஏய்! கும்பகோணத்தில் ரெயில் விட்ருக்காங்களாம்டா ..
நம்ப போய் பார்க்கலாமா?  ஆனா ரூட் தெரியாது என்று ஒருவன் முடிப்பதற்குள், என்னோட வாங்கடா எனக்கு ரூட் தெரியும் என்று எல்லா குழந்தைகளையும் ரெயில் பார்க்க, ரெயில் வண்டி போல் வரிசையாக, ஓட்டமும், நடையாக கும்பகோணம் அழைத்துக்கொண்டு போனேன்.  ரெயில் நிலையமும் அடைந்தோம். எல்லாரும் உற்சாகமாக வரதா( அப்பா பேர்) ரெயில் வருது போலருக்குடா  , ரொம்ப குஷியா இருக்கு என்று சொன்னார்கள். அவர்களுக்கு கும்பகோணம் வந்த குஷி.


ரெயிலும் வந்தது, நாங்கள் எல்லாரும் ரெயிலுக்கு "டாடா" காட்டி விட்டு திருப்பினால் எங்களையே முறைத்து பார்த்து கொண்டு TT நிற்கிறார். எல்லாரும் எங்கேருந்து வந்திருக்கிறீர்கள், எங்கே உங்கள் Platform டிக்கெட் என்று கேட்டார்? எல்லாரும் திருதிருனு முழிச்சுண்டு இருக்கும்போது நான் மட்டும் நாங்கெல்லாம் திம்மக்குடிலேர்ந்து ரயில் பார்க்க வந்தோம் ஆனா டிக்கெட் எடுக்கலை என்றேன். உடனே TT , சரி எல்லாரும் 50 தோப்புக்கரணம் போடுங்கள் என்றார்...

அனைவரும் 1, 2 , 3 என்று கணக்கு பண்ண நான் மட்டும் 1, 3, 5 என்று தோப்பு கரணம் விட்டு விட்டு போட்டு முடித்தேன். ஒரு வழியாக, ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்தோம்.

கும்பகோணம் அக்ரஹாரம் வரைக்கும் சரியாக வந்த நான் போகும் வழியை மறந்து விட்டேன். என்னடா வரதா! மறுபடியும் மறுபடியும் ஒரே ரோட்டுக்கு வர என்கிறார்கள் எல்லாரும். ஆமாம்டா ரூட் மறந்து போய்ட்டேன்டா என்று சொன்னேன்... சில பேர் அழ ஆரம்பித்து விட்டார்கள் ... நானும் எவ்வளவு முறை முயற்சித்தாலும் மெயின் ரோடு வரமாட்டேங்கறது.

அப்போது நல்ல வேலையாக எங்க ஊருக்கு வரும் மாமா என்னடா திம்மக்குடி குழந்தைகளா, நீங்க எல்லாரும் இங்கேயா இருக்கீங்க? அங்க திம்மக்குடியே அல்லோலக படறது உங்களை எல்லாரையும் காணம தேடிண்டு என்று சொல்லி, வாங்க என் பின்னாடியே என்று திம்மக்குடி அழைத்து கொண்டு போனார் .

திம்மக்குடி எல்லையிலேயே யாரடா எல்லாரையும் கூட்டிண்டு போனா என்று கேட்க எல்லாரும் கோரஸாக "வரதன்" தான் என்று சொல்ல, ஒரு மாமி ஓ! சீதா புள்ளையா? வா உங்க அம்மாகிட்ட சொல்லறேன் என்று என்னை இழுத்துக்கொண்டு போக அன்று முழுக்க எனக்கு அர்ச்சனைதான்.

இன்னும் நிறைய  சுவாரசியங்கள்..... வரும்.....





Thursday, April 23, 2020

About my father... A Legend, Positive, Bharathiyar disciple, Jovial, Traveller, Outspoken, Confidence and more...

அப்பா..... உன்னை பற்றி சொல்ல நான் எதிலிருந்து ஆரம்பிப்பது...

தமிழில் வார்த்தைகள் போதாதே!

எனக்கு எழுத கூட தெரியுமா? இப்போது எழுதுவது கூட புலமையால் அல்ல, ஏதோ என் மனதில் வருவதைத்தான்.

என் அப்பா என்றால் சுறுசுறுப்பு, தைரியம், குழந்தைத்தனம்,சத்தியம், உற்சாகம், பாரதியார் பக்தன், பெண் விடுதலை என்று பல இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

சுறுசுறுப்பு என்றால் எப்பொழுதும் எறும்பு போல் இருக்க வேண்டும் என்பார். அவரும் அப்படியே, என் அப்பாவை நான் என்றும் தளர்ச்சியுடன் பார்த்ததே கிடையாது . எப்பொழுதும் உற்சாகம், எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் நேர்கொண்ட பார்வை. உன்னுடைய நகைச்சுவை உணர்விற்கு அளவே இல்லை.


பிறந்ததோ திம்மக்குடி, 10 வயதில் சென்னை இடமாற்றம்.

சென்னையில் சிறுவயதிலேயே பாரதியார் கொள்கைகளால் ஈர்க்க பட்டு பத்திரிகை துறையில் பகுதி நேர பணியில் சேர்ந்தாய். "சுதேசி மித்திரன்" பத்திரிகையில் சப் எடிட்டராக வேலை. "கம்யூனிஸ்ட்" கட்சியில் தீவிரம், திரு. பாவேந்தர் பாரதிதாசனுடன் 10 நாட்கள் பாண்டிச்சேரியில் . இப்படியெல்லாம் சொல்லி கேள்வி....

திருமணம் ஆகி அண்ணா பிறந்தவுடன், பத்திரிகையில் வருமானம் போதாமல் விற்பனை துறையில் காலடி பதித்தாய்... அப்பொழுதும் உங்கள் எழுத்து பணியை நிறுத்திவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மிக இலக்கியத்தையும் படிக்கச் ஆரம்பித்து, அதிலும் உங்கள் எழுத்து திறமையை காட்ட ஆரம்பித்தாய். "காரல் மார்ஸ்" புத்தகத்தை படித்த நீங்கள் திருவாசகத்தையும் படித்து குடித்தீர்கள்.

உங்களை.. உங்கள் நினைவுகளை.. உங்கள் புத்தகங்களை... அடுத்தடுத்து பகிர்கிறேன்..