Tuesday, May 19, 2020

நான் பார்த்த தீபாவளி...


பாட்டி அந்த வயதிலும் உற்சாகம் குறையாமல் தீபாவளி தேதியை பார்த்து இன்னும் தீபாவளிக்கு எத்தனை நாள் இருக்கிறது என்று கணக்கு செய்வாள் . பாதி நாட்களை விட்டுவிட்டு இன்னும் ஒரு வாரம்தான் என்று சொல்லுவார். அப்படி ஒரு உற்சாகம். அனைவரும் சேர்ந்து அப்பாவுடன் தீபாவளி டிரஸ் எடுக்க செல்வோம் . முதலில் தாத்தா பாட்டிக்கு பின் எங்களுக்கு. அப்பாக்கு டிரஸ் எடுத்துக்கொண்டதாக ஞாபகம் இல்லை. பேபி அத்தைக்கும் புடவை எப்பொழுதும் எடுப்போம் . தி. நகரில் டிரஸ் அதை அடுத்து கண்டிப்பாக சரவணா பவன் ஹோட்டல் பேப்பர் தோசை, ஆப்பம் சட்னி, தாத்தா பாட்டிக்கு ஐஸ்கிரீம். ஆட்டோவில் வீடு வந்து சேர்வோம் . எனக்கு வெளியில் போனால் தாகம் எடுத்து விடும் ஜூஸ் குடிக்கத்தான்.....எல்லாரும் வீட்டிற்கு வந்து ட்ரெஸ்ஸை மறுபடியும் பார்த்து எப்பொழுது தீபாவளி வரும் என்று காத்து கொண்டு இருப்போம். பேபி அத்தைக்கு எப்பொழுதும் வாங்கிய புடவையை மறுபடியும் போய் மாற்றினால்தான் திருப்தி ஆனால் அந்த புடவை முதலில் வாங்கிய புடவையை விட மங்கலாக இருக்கிறது என்று என் பாட்டியிடம் இருந்து திட்டு வாங்கி கொள்வாள் . பாட்டி எப்பொழுதும் காலை வெளிச்சத்தில் புடவை பார்க்கவேண்டும் என்று வெய்யிலில் வைத்து பார்ப்பார். அவ்வளவு  ஆசை. நாங்கள் எல்லா காலனி பெண் குழந்தைகளும் அக்காக்களுடன் ட்ரெஸ்ஸுக்கு மேட்சாக தோடு, கிளிப், வளையல், பொட்டு என்று வாங்க மார்க்கெட்டில் இருக்கும் காஸ்மெடிக்ஸ் கடைக்கு போவோம். மழை இருந்தால் கூட குடை பிடித்து கொண்டு..... அப்பொழுது நதியா ஸ்டைல் ரொம்ப பேஷன்.என் அம்மா எல்லா பட்சணமும் சாஸ்திரத்துக்கு செய்வாள். அம்மாவுக்கு எண்ணையில் நின்றால் தலைவலி வயற்று குமட்டல் வந்துவிடும் என்று அப்பா ரொம்ப பலகாரம் செய்யவேண்டாம் என்பார் . எங்கள் காலனி மாமி ஒருவர் பின் ஒருவராக பட்சணம் செய்முறை ஆலோசித்து பேசி கொள்வார்கள் இடையே சரியாக வரவில்லை என்றால் அம்மா மற்றவர் வீட்டுக்கும் அவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்து பக்ஷணம் உதவி செய்வார்கள். இதற்கு இடையில் என் தாத்தாவுக்கு அரை வேக்காட்டில் முறுக்கு எடுத்து கொடுக்க சொல்வார் . பல்லில் கடிக்க லோகுவாக இருக்கும்.


பட்டாசுக்கு எங்கள் அண்ணா தான் லிஸ்ட் போடுவார். எனக்கு வெடி என்றால் பயம்.அண்ணாவும் அக்காவும் குருவி வெடி, லட்சுமி வெடி, அட்டோம் பாம் சரம் என்று லிஸ்ட் போடும் போது நானும் என் பங்குக்கு ஊசி வெடி, பாம்பு மாத்திரை , பென்சில் சாட்டை என்று சொல்வேன் . அப்பொழுது  எல்லாம் பட்டாசு கடை நவராத்ரி முடிந்தவுடன் திறந்து விடுவார்கள்.இதுல என்ன வேடிக்கை என்றால் யார் வீட்டில் அதிகம் வாங்கியிருக்கிறார் என்ற போட்டி நடக்கும் . எங்க வீட்ல 150 ரூபாவுக்கு வாங்கிட்டோம் உங்க வீட்ல என்று காம்பரிசன் வேற!.தீபாவளி முதல் நாள் பால் பாயசம் பஜ்ஜி , வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு கறி தான் மாற்ற படாத மெனு . கொஞ்சம் மத்தாப்பு பட்டாசு முதல் நாள் இரவுக்கு, தீபாவளி அன்று நிறைய என்று பிரித்து கொள்வோம் . தீபாவளி அன்று யார் முதல் மத்தாப்பு கொளுத்துகிறார்கள் என்ற போட்டி வேற...


விடியற் காலை பார்க்காத நாங்கள் 3 மணிக்கே எழுந்து விடுவோம். அம்மா ஒரு பலகையில் கோலம் போட்டு அதில் எஙகளை உட்கார சொல்லி முதலில் தாத்தா பின் பாட்டி அப்பா அம்மா என்று அனைவரும் தலையில் எண்ணெய் வைப்பார்கள் ( காய்ச்சின எண்ணெய் ). அதில் என் தாத்தா அழகாக மூன்று விரலில் எண்ணெய் எடுத்து நாசுக்காக வைப்பார், ஏன் என்றால் அனைவரும் எண்ணெய் வைத்து அதிகமாகிவிடுமோ என்று. அனைவரின் புத்தாடையும் ஸ்வாமி முன்னாடி சந்தனம் குங்குமம் வைத்து பாட்டி நாங்கள் குளித்து வந்தவுடன் தருவார் . நாங்கள் அதை போட்டுகொண்டு பாட்டி தாத்தா அப்பா அம்மா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தவுடன் முதலில் கொடுப்பது தீபாவளி மருந்து . சாப்பிட்டே ஆகா வேண்டும்.மருந்து சாப்பிட்ட பிறகுதான் ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸ். ஆனால் ஸ்வீட்ஸ் சாப்பிடும் பொறுமை கூட இல்லாமல் மத்தாப்பு கொளுத்த புஸ்வாணம் சங்கு சக்கரம் என்று வைக்க ஓடி விடுவோம் . அப்பா ஒரு இரும்புபக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து அதில் கொளுத்தி அணைந்த மத்தாப்பை போட சொல்லுவார். வேற யார் காலிலும் மத்தாப்பு சுட்டுவிட கூடாது என்பதற்காக. அம்மாவும் எல்லா மாமிகளும் கங்கா ஸ்தானம் ஆச்சா என்று பரஸ்பரம் கேட்டு கொள்வார்கள் . என் அப்பாவும் மற்ற நண்பர்கள் அப்பாக்களும் ஹாப்பி தீவாளி கங்கா ஸ்தானம் ஆச்சா என்று கேட்டுக்கொண்டு நாங்கள் பட்டாசு வெடிப்பதை சூப்பர்விஸ் செய்வார்கள். இப்படியாக போகும் எங்கள் தீபாவளி. அன்று முழுவதும் புது ட்ரெஸ்ஸை அவிழ்க்க மாட்டோம். எல்லார் பட்டாசும் வெடித்த முடிந்த உடன் அதில் இருக்கும் மருந்தை எடுத்து கொளுத்தி போடுவோம்..... பட பட என்று வெடிக்கும்... அதை விட பெரிதாக இருக்கும் எங்கள் சிரிப்பு.

அந்த தீபாவளியை பார்த்தால் அனுப்பி வையுங்கள்.

No comments:

Post a Comment