Thursday, April 30, 2020

A Second life....

சம்பவம் 2 :-

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட கண்டம். இனி அந்த காட்சி நீங்கள் சொன்னபடி ...

கர்நாடகா குல்பர்க்கா சுலியா வழியாக பஸ் சென்று கொண்டு இருக்கிறது. நான் பின் சீட்டில் உட்கார்ந்து இருக்கிறேன். பின்சீட்டில் உட்காரவே மாட்டேன், ஒரு முஸ்லிம் தம்பதியர் என்னிடம் வந்து, நாங்கள் இருவரும் சேர்த்து உட்கார வேண்டும், பின்சீட்டில் ஒரு இடம் இருக்கிறது, நீங்கள் அங்கு போய்  அமர முடியுமா என்று கேட்டார்கள். அதனால்தான் பின்சீட்டு.....

பஸ்சின் பின்சீட்டில் உட்கார்ந்த சில நேரத்தில் கண் உறங்கி போனேன். கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய சத்தம்.... அதுதான் தெரியும். கண்விழித்து பார்த்தால், ஒரு நதிக்கரையில் நான், ஒரே அழுகுரல், ஆம்புலன்ஸ் சத்தம்.... பஸ் கீழே விழுந்து கிடந்தது..... என் கை  கால்களை தொட்டு பார்த்தேன், எல்லாம் இருந்தது சிறு காயங்களுடன்.... சரி வாயை கொப்பளிக்கலாம் என்று தண்ணியை  எடுத்து கொப்பளித்து நதியை பார்த்தால் ஒரே ரத்தம், என் வாயிலேர்ந்துதான்... அதை பார்த்த மாத்திரத்தில், மயங்கி போனேன்.

கண் விழித்தபோது, சுலேயா அரசு மருத்துவமனையில் படுத்திருதேன். நான் கண்விழித்ததை பார்த்த நர்ஸ், உங்களுக்கு முன்பற்கள் மொத்தமா போய்விட்டது, தையல் போட்டு இருக்கிறோம் என்றார். வாய் வீங்கி இருந்தது. சாப்பிட கூட வாய் திறக்க முடிய வில்லை. சுலேயாவில் இருக்கும் என் நண்பரும், வியாபாரி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து கொண்டு போனார். நான் அவர் வீட்டில் 2 1/2 மாதம் இருந்து சித்தா வைத்தியம் பெற்றேன். இப்போது நலமாக இருக்கிறேன். இன்னும் 10 நாட்களில் சென்னை வருகிறேன் என்று இத்தனை விபரங்களை தாங்கி வந்த இன்லேண்ட் லெட்டர் எங்களுக்கு கிடைத்தது.

இப்போதும்  அந்த நிகழ்ச்சியை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. அதில் ஒன்று கடவுளின் கருணை , சுமார் 20 பேர் இருந்த பஸ்சில்  நீங்கள் பிழைத்தது.( உன்னிடம் இடம் கேட்டு உட்கார்ந்த முஸ்லிம் தம்பதியர், விபத்து நடத்த இடத்திலேயே உயிர் இழந்ததாக நீங்கள் சொன்னீர்கள்) மற்றொன்று உங்களின் மனவலிமை. நீங்கள் பூரண குணமாகும் வரை எங்களுக்கு விஷியத்தை சொல்லாமல் குடும்பத்தை கலக்க படுத்தாமல் இருந்தது.

இப்பொழும் எனக்கு ஞாபகம் இருக்கிறது அன்று வந்த அந்த கடிதம் இந்த சம்பவத்தை சுமந்த  படி...

வாழ்க்கை சம்பவம் இன்னும் பல ........


Friday, April 24, 2020

குண்டாபுர (மங்களூர்) ரயில் நிலையத்தில்..

என் அப்பா என்னுடன் பகிர்ந்த வாழ்க்கை சம்பவங்கள் :-

சம்பவம் 1:-

1980 இல் நடந்தது.

நல்ல காற்று, மழை, இடி, குண்டாபுர (மங்களூர்) ஸ்டேஷனில் நான் (அப்பா) நிற்கிறேன். மின்சாரம் இல்லை. ஸ்டேஷன் மாஸ்டர் இன்றைக்கு இரவு ட்ரெயின் வராது என்று சொல்லி தன் அறையை பூட்டி கொண்டு போய் விட்டார்.

நான் ஒருவன் மட்டும் என் கால்களுக்கு இடையில் இரண்டு பெட்டிகளையும் வைத்து கொண்டு ஸ்டேஷனில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து இருக்கிறேன். ஒரு பெட்டியில் ஆபீஸ் கேஷ், இன்னொரு பெட்டியில் என் உடமைகள்.... அப்பொழுது மின்னலுக்கு இடையில் ஒரு உருவம் அடர்ந்த தாடியுடன் என் முன்னால் நின்று என்னையே பார்த்து கொண்டு இருந்தான். சரியாக பார்ப்பதற்குள் மின்னல் நின்று விட்டது... குமிருட்டு ...


உடனே நான் என் பெட்டிகளை இன்னும் நன்றாக பற்றிக்கொண்டு,  தீர்க்கமாக எந்த ஒரு பயமும் இல்லாமல் மின்னல் வந்த இடத்தையே பார்த்தேன். இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தது, அவனும் என்னையே பார்த்தான். உடனே நான் உரத்த குரலில், யார்டா, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அவன் எதுவுமே பதில் சொல்லாமல் ஓடி விட்டான். அன்று இரவு நான் தன்னந்தனியே ஸ்டேஷனிலேயே உறங்கினேன்.

விடிய காலை ஸ்டேஷன் மாஸ்டர் வந்து அவர் அறை திறக்கும் சத்தம் கேட்டு தூக்கம் களைந்தேன்.

என்ன சார், இங்கேயே தூங்கிட்டிங்களா? என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார். ஆமாம் என்று சொல்லி நேற்று நடந்த சம்மதத்தை ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொன்னேன்.

ஓ அப்படியா... அவன் வேற யாரும் இல்லை சார், ஒரு பைத்தியம். இங்கதான் சுத்திகிட்டு இருப்பான் என்றார்.

உடனே இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நான் "அப்பா  உனக்கு பயம்வே இல்லையா" என்றேன்.

அப்பொழுது அவர் சொன்னார், வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் தைரியத்தை மட்டும் விட்டுவிட கூடாது என்று.

இப்படி தன் வாழ்க்கை பாதையில் தான் எதிர் கொண்ட பல சம்பவங்களை எப்பொழுதும் சொல்வார்... அது ஏராளம்.

இன்னும் வரும்............ 

First train in Kumbakonam

அப்பாவின் சிறுவயது குறும்பு:-

அப்பாவுக்கு அப்போது வயது 8 இருக்கும்.

திம்மக்குடியில் அவர்கள் விளையாடி கொண்டிருக்கும் போது...  இனி அப்பா தொடர்வார் ...

ஏய்! கும்பகோணத்தில் ரெயில் விட்ருக்காங்களாம்டா ..
நம்ப போய் பார்க்கலாமா?  ஆனா ரூட் தெரியாது என்று ஒருவன் முடிப்பதற்குள், என்னோட வாங்கடா எனக்கு ரூட் தெரியும் என்று எல்லா குழந்தைகளையும் ரெயில் பார்க்க, ரெயில் வண்டி போல் வரிசையாக, ஓட்டமும், நடையாக கும்பகோணம் அழைத்துக்கொண்டு போனேன்.  ரெயில் நிலையமும் அடைந்தோம். எல்லாரும் உற்சாகமாக வரதா( அப்பா பேர்) ரெயில் வருது போலருக்குடா  , ரொம்ப குஷியா இருக்கு என்று சொன்னார்கள். அவர்களுக்கு கும்பகோணம் வந்த குஷி.


ரெயிலும் வந்தது, நாங்கள் எல்லாரும் ரெயிலுக்கு "டாடா" காட்டி விட்டு திருப்பினால் எங்களையே முறைத்து பார்த்து கொண்டு TT நிற்கிறார். எல்லாரும் எங்கேருந்து வந்திருக்கிறீர்கள், எங்கே உங்கள் Platform டிக்கெட் என்று கேட்டார்? எல்லாரும் திருதிருனு முழிச்சுண்டு இருக்கும்போது நான் மட்டும் நாங்கெல்லாம் திம்மக்குடிலேர்ந்து ரயில் பார்க்க வந்தோம் ஆனா டிக்கெட் எடுக்கலை என்றேன். உடனே TT , சரி எல்லாரும் 50 தோப்புக்கரணம் போடுங்கள் என்றார்...

அனைவரும் 1, 2 , 3 என்று கணக்கு பண்ண நான் மட்டும் 1, 3, 5 என்று தோப்பு கரணம் விட்டு விட்டு போட்டு முடித்தேன். ஒரு வழியாக, ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்தோம்.

கும்பகோணம் அக்ரஹாரம் வரைக்கும் சரியாக வந்த நான் போகும் வழியை மறந்து விட்டேன். என்னடா வரதா! மறுபடியும் மறுபடியும் ஒரே ரோட்டுக்கு வர என்கிறார்கள் எல்லாரும். ஆமாம்டா ரூட் மறந்து போய்ட்டேன்டா என்று சொன்னேன்... சில பேர் அழ ஆரம்பித்து விட்டார்கள் ... நானும் எவ்வளவு முறை முயற்சித்தாலும் மெயின் ரோடு வரமாட்டேங்கறது.

அப்போது நல்ல வேலையாக எங்க ஊருக்கு வரும் மாமா என்னடா திம்மக்குடி குழந்தைகளா, நீங்க எல்லாரும் இங்கேயா இருக்கீங்க? அங்க திம்மக்குடியே அல்லோலக படறது உங்களை எல்லாரையும் காணம தேடிண்டு என்று சொல்லி, வாங்க என் பின்னாடியே என்று திம்மக்குடி அழைத்து கொண்டு போனார் .

திம்மக்குடி எல்லையிலேயே யாரடா எல்லாரையும் கூட்டிண்டு போனா என்று கேட்க எல்லாரும் கோரஸாக "வரதன்" தான் என்று சொல்ல, ஒரு மாமி ஓ! சீதா புள்ளையா? வா உங்க அம்மாகிட்ட சொல்லறேன் என்று என்னை இழுத்துக்கொண்டு போக அன்று முழுக்க எனக்கு அர்ச்சனைதான்.

இன்னும் நிறைய  சுவாரசியங்கள்..... வரும்.....

Thursday, April 23, 2020

About my father... A Legend, Positive, Bharathiyar disciple, Jovial, Traveller, Outspoken, Confidence and more...

அப்பா..... உன்னை பற்றி சொல்ல நான் எதிலிருந்து ஆரம்பிப்பது...

தமிழில் வார்த்தைகள் போதாதே!

எனக்கு எழுத கூட தெரியுமா? இப்போது எழுதுவது கூட புலமையால் அல்ல, ஏதோ என் மனதில் வருவதைத்தான்.

என் அப்பா என்றால் சுறுசுறுப்பு, தைரியம், குழந்தைத்தனம்,சத்தியம், உற்சாகம், பாரதியார் பக்தன், பெண் விடுதலை என்று பல இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

சுறுசுறுப்பு என்றால் எப்பொழுதும் எறும்பு போல் இருக்க வேண்டும் என்பார். அவரும் அப்படியே, என் அப்பாவை நான் என்றும் தளர்ச்சியுடன் பார்த்ததே கிடையாது . எப்பொழுதும் உற்சாகம், எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் நேர்கொண்ட பார்வை. உன்னுடைய நகைச்சுவை உணர்விற்கு அளவே இல்லை.


பிறந்ததோ திம்மக்குடி, 10 வயதில் சென்னை இடமாற்றம்.

சென்னையில் சிறுவயதிலேயே பாரதியார் கொள்கைகளால் ஈர்க்க பட்டு பத்திரிகை துறையில் பகுதி நேர பணியில் சேர்ந்தாய். "சுதேசி மித்திரன்" பத்திரிகையில் சப் எடிட்டராக வேலை. "கம்யூனிஸ்ட்" கட்சியில் தீவிரம், திரு. பாவேந்தர் பாரதிதாசனுடன் 10 நாட்கள் பாண்டிச்சேரியில் . இப்படியெல்லாம் சொல்லி கேள்வி....

திருமணம் ஆகி அண்ணா பிறந்தவுடன், பத்திரிகையில் வருமானம் போதாமல் விற்பனை துறையில் காலடி பதித்தாய்... அப்பொழுதும் உங்கள் எழுத்து பணியை நிறுத்திவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மிக இலக்கியத்தையும் படிக்கச் ஆரம்பித்து, அதிலும் உங்கள் எழுத்து திறமையை காட்ட ஆரம்பித்தாய். "காரல் மார்ஸ்" புத்தகத்தை படித்த நீங்கள் திருவாசகத்தையும் படித்து குடித்தீர்கள்.

உங்களை.. உங்கள் நினைவுகளை.. உங்கள் புத்தகங்களை... அடுத்தடுத்து பகிர்கிறேன்..